ஞாயிறு, அக்டோபர் 06, 2013



ஏக இறைவனின் திருப்பெயரால்....

وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى {3} إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى {4}


அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை.அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. 53:3,4



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

ஹஜ்ஜூடைய மாதம் வந்து விட்டாலே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அரஃபா பெருவெளியின் இறுதிப் பேருரை நமக்கு நினைவுக்கு வராமல் இருக்காது.

உலக மக்கள் அமைதியுடன் வாழ்வதற்கு தேவையான அனைத்து வழி காட்டுதல்களையும் அந்தப் பேருரையில் கூறினார்கள்.

அவ்வாறு உலக மக்கள் அமைதியுடன் வாழ்வதற்கு தேவையான அனைத்து வழி காட்டுதல்களையும் கூறியப் பேருரையில் அவர்களது உலக வாழ்க்கைகையின் முடிவையும் சேர்த்துக் கூறினார்கள்.

இன்றும் நம்முடைய நெஞ்சை விட்டு நகலாமல் நின்று கொண்டிருப்பது அடுத்த வருடம் நான் உங்களுடன் இருக்க மாட்டேன் என்றுக் கூறிய அவர்களுடைய மரணம் பற்றிய முன்னறிவிப்பு.

இந்த ஆண்டுக்குப்பின் இனிமேல் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம் என்று தமது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டார்கள். நூல் : தப்ரானி அல்கபீர்.

ஆண்டுதோறும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம்வந்து (அதுவரைஅருளப்பட்ட) குர்ஆன் வசனங்களை ஓதச் செய்துவந்தனர். இந்த ஆண்டு இரண்டு தடவை என்னிடம் வந்தார்கள். என் மரணம் நெருங்கி விட்டதாகவே எண்ணுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) தமது மகள் ஃபாத்திமாவிடம் தெரிவித்தார்கள். நூல் :புகாரி 3624, 6285

ஏமன் நாட்டின் ஆளுநராக முஆத் பின் ஜபலை நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். முஆது அவர்கள் குதிரையில் ஏறி அமர்ந்துவர அவருடன் நடந்தே வந்து நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் வழி அனுப்பிவைத்தார்கள். அப்போது பல அறிவுரைகளைக் கூறிவிட்டு அடுத்த ஆண்டு நீ என்னைச் சந்திக்கமாட்டாய் என்றே நினைக்கிறேன் என்று கூறினார்கள்.  நூல்அஹ்மத் 22404

மக்களிடம் கூறியவாறே, மகளிடம் கூறியவாறே முஆத் (ரலி) அவர்களிடம் கூறியவாறே அண்ணல் அவர்கள் அதற்கடுத்த வருடம் ஹஜ்ஜூடைய மாதத்திற்கு முன்னரே உலகை விட்டுப் பிரிந்து விட்டார்கள்.

படிப்பினை பெறும் பாடம்:

மார்க்க விஷயத்தில் மக்களிடத்தில் 23 வருட காலங்கள் அவர்கள் கூறிய அனைத்து சொற்களும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவித்ததே அன்றி சுயமாக எதையும் கூறியதில்லை என்பதற்கு அவர்களது மரணம் பற்றிய முன்னறிவிப்பும் அறிவித்ததுப் போன்றே நிகழ்ந்து விட்ட அவர்களது மரணமும் உலகம் முடியும் காலம் வரை சான்றுப் பகர்ந்து கொண்டிருக்கும்.

நாம் அறிவித்துக் கொடுப்பதைத் தவிற அவர் தாமாக எதையும் கூறுவதில்லை என்று உலக அதிபதியாகிய அல்லாஹ்வே தன் திருமறையில் நற்சான்றிதழ் வழங்கவும் செய்கிறான்.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. திருக்குர்ஆன்.53:3,4.

உலகம் முடியும் காலம் வரை உலகை கோலோச்சும் அற்புத வேதம் திருக்குர்ஆன் சத்திய வேதமே அன்றி துளி அளவேனும் புனையப்பட்டதில்லை என்பதையும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சத்திய தூதரே அன்றி நிச்சயமா வேறில்லை என்பதையும் இதன் மூலமும், இன்னும் ஏராளமான நடந்தேறிய முன்னறிவிப்புகளின் சான்றுகளுடனும் உறுதிப்பட நம்புகிறோம்.

முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் சத்தியத் தூதர் தான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு இருந்தும், திருக்குர்ஆன் சத்திய வேதம் தான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு இருந்தும், திருக்குர்ஆன் கூறும் உபதேசங்களையும், அல்லாஹ்வின் தூதர் அவர்களின் உபதேசங்களையும் எழுத்து வடிவில் அமைத்து துணிப் பையில் சுருட்டி வைத்து விட்டு வரலாறு இல்லாத அவுலியாக்களிடம் மண்டி இடுவதும், யாரோ ஒரு பெரியார் சொன்னார், மஹான் சொன்னார் என்று அவர்களுடைய ஆதாரமற்ற, அர்த்தமற்ற கூற்றுக்களை ஏற்று தஃலிம் தொகுப்புகளையும்> மத்ஹபு கித்தாபுகளையும் பின்பற்றுவதும், அல்லாஹ் அல்லாதோரை அழைக்கும் ( மௌலூது ஓதப்படும் ) பள்ளிவாசல்களில் தொழச் செல்வதும், ஹத்தம் ஃபாத்திஹா, பூரியான் ஃபாத்திஹா, ராத்திப் ஓதுவது என இன்னும் பட்டியலிட முடியாத அளவுக்கான பாவ காரியங்களில் உலக ஆதாயத்திற்காக மூழ்கித் திளைப்பது சத்திய வேதம் திருக்குர்ஆனின் மீதும், சத்தியத் தூதர்(ஸல்) அவர்களின் நுபுவ்வத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து வரும் துரதிருஷ்ட நிலை வருத்தமளிக்கிறது. நுவூதுபில்லாஹ் அல்லாஹ் இதிலிருந்தும் நம்மை பாதுகாக்க வேண்டும்.

அண்ணல் அவர்கள் கூறிய பல முன்னறிவிப்புகள் இன்னும் நடக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் ஒவ்வொரு முஸ்லீமும் மறுமையை நம்பி மரணத்தை எதிர் நோக்கியவர்களாக வாழ்ந்து வருகிறோம். அவர்கள் கூறாத எந்த ஒன்றையும் நாம் மார்க்கமாக ஆக்குவது முறையாகுமா ? சிந்திக்க வேண்டாமா ?. 

அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய விதத்தில் அஞ்சிக் கொள்ளும் நன்மக்கனாக, திருக்குர்ஆனையும், திருத்தூதர் (ஸல்) அவர்களின் நுபுவ்வத்தையும் நம்ப வேண்டிய விதத்தில் நம்பி அதனடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் நன் மக்களாக வல்ல அல்லாஹ் நம் அனைவரயும் ஆக்கி அருள் புரிவானாக !



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்